இறைவன் உங்கள் கண்ணுக்கு எட்டுவதில்லை. கருத்துக்கு எட்டுவான். உங்கள் கைக்கு எட்டுவதில்லை. வாய்க்கு எட்டுவான். அவனை அன்போடு பற்றுங்கள். விலகமாட்டான். எங்கே அன்பிருக்கிறதோ அங்கே இறைவன் இருக்கிறான். பலகாலம் ஆண்டவனை வணங்கிப் பெறும் புண்ணிய பலன்களை எல்லாம் ஒரே நாளில் பெற முடியும். எப்படி என்றால் பசியால் வாடும் அன்பர் முகம் மலர உணவினைத் தருமம் செய்யுங்கள். நிச்சயம் புண்ணியம் கிடைக்கும். எத்தனை படிகள் என்று மலைத்து நிற்காதீர்கள். எல்லாப் படிகளும் கடந்து விடலாம். உச்சிக் கமலத்தில் ஊற்றெடுக்கும் அமுதத்தை உண்டு களிக்கலாம். மனதில் இறைவனை அடைய வேண்டும் என்ற வைராக்கியத்தை மட்டும் பற்றிக் கொள்ளுங்கள். கதிரவன் ஓடிக்கொண்டே இருக்கிறான். அவன் பின்னால் காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருநாளாய் இரவும்பகலும் கழிகிறது. காலத்தை விரயம் செய்யாமல் நிலையான தருமங்களைச் செய்யுங்கள்.மறப்பது மனிதர் இயல்பு. பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம். உடலை உயிர் மறக்கலாம். உயிரை உடல் மறக்கலாம். நெஞ்சம் தான் கற்ற கல்வியை மறக்கலாம். ஆனால், தவத்தில் சிறந்தவர்களின் மனத்தில் உறையும் இறைவனை மறக்கக் கூடாது.
No comments:
Post a Comment