Saturday, August 28, 2010

வள்ளலார் போதனைகள்

அன்பு வெள்ளமாகும். அது ஒருநாள் நம்மை முற்றும் விழுங்கிக் கரை கடந்து போகும்.

மறப்பது மனிதரியல்பு, மறக்காதிருப்பது மகத்தான இயல்பு. இங்கே பெற்ற தாயை மகன் மறக்கலாம். பிள்ளையைத் தாய் மறக்கலாம், தாங்கி நிற்கும் உடலை உயிர் மறக்கலாம், தனது ஆதாரமான ஆவியை உடல் மறக்கலாம், நெஞ்சம் கற்றதை மறக்கலாம், ஆனால், தவத்தில் மிக்கார் மனத்தில் உறையும் தலைவனை நாம் மறக்கலாமா?

எல்லைகளைக் கட்டியாள எண்ணமில்லை. எதிலெதிலோ பற்று வைத்து மாளவும் விரும்பவில்லை. அந்த சொர்க்கமே கிடைப்பதாயினும் அதை தூக்கி எறிந்துவிட்டு என் மேலோனின் கருணை ஒன்றையே வேண்டி நிற்பேன்.

அருட் பெருஞ்ஜோதி என்பது அகத்தேயும், வெளியேயும் வெளிச்சத்தைத் தருகிறது.

நீங்கள் எதைச் செய்தாலும், அது அடுத்தவருக்கு எந்தக் காலத்திலும் இடையூறு செய்வதாய் இருக்கக்கூடாது. அதுவே பொது நோக்கு. உங்கள் எண்ணமும் செயலும் நல்லதாய் இருக்க வேண்டும்.

நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கிறது. இந்த ஜோதி மணியைத்தான் நாம் 'சண்முகம்' என்று அழைக்கிறோம்.

பானையில் சோறு வெந்துவிட்டதா என்று பார்க்க ஒவ்வொரு சோற்றையுமா பதம் பார்க்கிறார்கள். ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு போதும் பதம் பார்க்க. அதுபோல எல்லாச் சமய மதத் தெய்வங்களையும் ஆய்வு செய்யாமல் நம் நாட்டிலே பெரும்பாலாகப் பரவியுள்ள சைவ, வைஷ்ணவ சமயத் தெய்வங்களை ஆய்வு செய்து உண்மையைப் புரியவைத்தால் அந்த ஆய்வு மற்ற சமய மதங்களுக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment